கைதானவர்கள் pt web
தமிழ்நாடு

கொடைக்கானல்: மொத்த குடும்பமும் சேர்ந்து விற்ற போதைக்காளான்.. சிக்கிய 5 பேர்.. நடந்தது என்ன?

கொடைக்கானலில் குடும்பத்துடன் போதைக்காளான் விற்ற விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கொடைக்கானல் என்றால் நம் அனைவரின் நினைவுக்கு வருவது அருவி தான். இந்த அருவிகளை காண்பதற்கும், குளிப்பதற்கும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐ.டி நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள் என பலரையும் குறி வைத்து போதை காளான் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் போலிசார் கொடைக்கானல் பகுதிகள் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணியாளராக பணிபுரிந்து வரும் சாலமோன் 53, இவரது மனைவி ஜெயந்தி 43, சாலமோனின் மகள் விக்டோரியா ராணி 28, மற்றும் சாலமோனின் மருமகன் அருண், சாலமோனின் தங்கை ஹெலன் மேரி ஆகியோர் போதை காளான் கொரியர் சர்வீஸ் மூலம் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சாலமோனின் தங்கை ஹெலன் மேரியும், சாலமோனின் மருமகன் அருனும் வெளியூர்களில் தங்கி கொரியர் மூலம் வரும் போதை காளான் வாங்கி அங்கு உள்ளவர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் போதை காளானை பறிமுதல் செய்தனர். போதை காளான் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் எங்கு விற்பனை செய்து வந்தனர் யார்? யார்? தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து போதை காளான் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதே போல் அதை பகுதியில் போதை காளான் விற்பனை செய்து வந்த தங்கதுரை ( 32 ) மற்றும் சுரேஷ் 56 ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 100 கிராம் போதை காளானை பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில் போதை காளான் விற்பனை செய்து வந்த 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.