ஜெயகுமார் முகநூல்
தமிழ்நாடு

நீடிக்கும் மர்மம்... மரணமடைந்த காங். நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் தோட்டக் கிணற்றில் கிடைத்த கத்தி!

காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமாரின் மாயமான செல்போனை தேடுவதற்காக அவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பச்சை நிறத்தில் கத்தியொன்று அங்கு கிடைத்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர் - முருகேசன்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த இரண்டாம் தேதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், நான்காம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக கரைசுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இருந்து அவர் மீட்கப்பட்டார்.

தொடர்ந்து உடற்கூராய்வு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் உடல் கொண்டு செல்லப்பட்டது. பின் பரிசோதனை முடிவடைந்து சொந்த கிராமமான கரைசுத்துபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம், தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ள பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையிலுள்ள காவலர்கள் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் இடம் பெற்றுள்ள நபர்கள் அனைவரிடமும் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயக்குமாரின் எரிந்த உடல் கிடைத்த இடத்தின் அருகிலேயே அவரின் வாக்களர் அட்டை, பேன் கார்டு போன்றவை கிடைத்துள்ளது முக்கிய திருப்பமாக அமைந்தது. அத்துடன் இறுதியாக அவர் வாங்கிய டார்ச் லைட்டும் கிடைத்திருந்தது. இருப்பினும் ஜெயக்குமார் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படக்கூடிய செல்போன் மட்டும் மாயமாகியுள்ளது. விசாரணையில் டவர் காட்டிய சிக்னலின்படி அவரின் செல்போன் கடைசியாக குட்டம் பகுதியில் இருந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ஜெயகுமாரின் செல்போனை 2 ஆவது நாளாக தேடும் பணியில் காவல்துறையினர் இன்று ஈடுபட்டுள்ளனர். இதற்காக நேற்று இரவு 8 மணி அளவில், ஜெயக்குமாரின் தோட்டத்தில் உள்ள 85 அடி ஆழமுள்ள கிணற்றி இருந்து மின்மோட்டார் மூலம் நீரை இரைத்து செல்போனை தேடி வருகின்றனர்.

இதற்கான பணிகள் தற்போது வரை நீடித்து வருகிறது. இதற்காக முழுவதுமாக தண்ணீர் கிணற்றில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அடியில் சகதியாக இருப்பதால் செல்போனை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், செல்போனை தேடும் பணியின் போது கிணற்றில் இருந்து பச்சை நிறத்தில் கத்தி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கத்தியுடன் டப்பாவும் கிடைத்துள்ளது வழக்கில் கூடுதல் துணுக்காக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, ஜெயக்குமாரின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அதன் முதற்கட்ட அறிக்கை காவல்துறையிடம் வழங்கப்பட்டது. ஆனால், விசாரணையை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், முழுமையான தகவல்கள் எதுவும் அந்த அறிக்கையில் இல்லை என கூறப்படுகிறது.

ஆகையால், விரிவான உடற்கூராய்வு அறிக்கைக்காக காவல்துறையினர் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவான உடற்கூராய்வு அறிக்கை இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையையும், விரைந்து தருமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.