Ramakrishnan pt desk
தமிழ்நாடு

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயராக திமுகவைச் சேர்ந்த கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

webteam

செய்தியாளர்: மருதுபாண்டி

திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்தவர் திமுக கவுன்சிலர் சரவணன். இவருக்கும் சக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தொடர்ந்து மாமன்ற கூட்டங்களை கவுன்சிலர்கள் புறக்கணித்து வந்தனர். ஒருகட்டத்தில் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனால் கட்சித் தலைமை மாமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து பேசியது. இதையடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் யாரும் பங்கேற்காமல் தவிர்த்தனர். அதனால் அது தோல்வியில் முடிந்தது.

Nellai corporation

இருப்பினும் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்காமல் கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். தொடர் எதிர்ப்புகளால், திமுக தலைமையின் உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த மாதம் 3 தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சியின் பொறுப்பு மேயராக துணை மேயர் ராஜூ நியமிக்கப்பட்டு தொடர்ந்து மாமன்ற கூட்டங்களில் பங்கேற்று வந்தனர்.

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூரில் காலியாக உள்ள மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் “வருகின்ற 5ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும்” என அறிவிப்பு வெளியானது.

இதற்காக வேட்பு மனு விநியோகம் கடந்த 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை ஒருவர் கூட வேட்பு மனுவை வாங்கவில்லை. இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (5ஆம் தேதி) காலை 10 மணிக்கு மேல் மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

former Nellai Mayor

இதைத் தொடர்ந்து மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட திமுக மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நெல்லை மாநகராட்சியின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணனை மேடையில் அறிமுகம் செய்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர்.

Ministers

தொடர்ந்து இன்று திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் போட்டியிட்ட கிட்டு என்ற ராதாகிருஷ்ணன் 30 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட பவுல் ராஜ் 23 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து 30 வாக்குகளைப் பெற்ற கிட்டு என்ற ராமகிருஷ்ணன் திருநெல்வேலி மாநகராட்சி மேயாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் நெல்லையில் மேயர் யார் என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.