தமிழ்நாடு

கிசான் முறைகேடு - தண்டோரா போட்டு பணத்தை திரும்ப கேட்கும் மாவட்ட ஆட்சியர்

webteam

சேலம் மாவட்டத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் தொகையை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஊராட்சிகள் வாயிலாக தண்டோரா போட்டு போலி நபர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

சேலம் மாவட்ட அளவில் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி முறைகேடாக பெறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இதுவரை ஒரு கோடியே 80 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை வரும் 14-ம் தேதிக்குள் வசூலிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் முறைகேடாக பணம் பெற்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் அந்த நபர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் போலியாக பணம் பெற்றவர்கள் பெயர், விலாசம், வங்கி கணக்கு எண், அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கியுள்ளது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், நங்கவள்ளி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பட்டியல் ஒவ்வொரு ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் அனைத்து நியாயவிலை கடைகளின் முன்பாக ஒட்டப்பட்டுள்ளது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தை பொருத்தவரை மொத்தம் 947 பேர் நிதி உதவி திட்டத்தின் கீழ் பணம் பெற்றுள்ளனர். இவர்களில் 347 பேர் போலியாக பணம் பெற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தம் 22 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் முறைகேடாக பணம் பெற்றதாக கூறப்படும் நிலையில் ரூ.8 லட்சம் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை சம்பந்தப்பட்ட நபர்கள் வரும் திங்கட்கிழமைக்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்தும் தொகைக்கான ஆவணத்தை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் இனி வரும் காலங்களில் அரசு வழங்கும் எந்த சலுகையும் அவர்களுக்குக் கிடைக்காது என்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவின்பேரில் மாவட்ட முழுக்க அனைத்து பகுதிகளிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.