தமிழ்நாடு

“சிகிச்சையின்போது எச்.ஐ.வி பரவ வாய்ப்பில்லை” - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன்

“சிகிச்சையின்போது எச்.ஐ.வி பரவ வாய்ப்பில்லை” - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன்

webteam

மாங்காட்டை சேர்ந்த பெண்ணுக்கு கீழ்பாக்கம் மருத்துவமனை சார்பில் கொடுக்கப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று இல்லை என கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், தலைநகர் சென்னையில் இதே போல் ஒரு சம்பவம் நடந்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

கடந்த டிசம்பர் மாதம் கருவுற்ற இவருக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 15ஆம் தேதி குழந்தை பிறந்தது. கருவுற்றிருந்தபோது ரத்த சோகை பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த மே மாதம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனக்கு ரத்தம் செலுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 

ரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் தனியார் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தனக்கு எச்.ஐ. வி பாதிப்பு இல்லை என்றும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட பின்னரே தனக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன் வசந்தாமணி புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, “மாங்காட்டை சேர்ந்த பெண்ணுக்கு கீழ்பாக்கம் மருத்துவமனை சார்பில்  கொடுக்கப்பட்ட ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்று இல்லை. 

அவர் ஏற்கெனவே புகார் அளித்திருந்த நிலையில் இதற்கான விசாரணை நடத்தி ஆதாரத்தை இன்று அரசு மருத்துவ இயக்கத்திற்கு சமர்பிக்க இருந்த நிலையில் அவர் எங்கள் மீது ஊடங்கங்களில் இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி உள்ளது என்பதை நாங்கள்தான் கண்டறிந்தோம். 

கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வரும் முன்பு அவர்கள் வைத்திருக்கும் ஆதாரத்தில் தமக்கு எச்.ஐ.வி இல்லை என்பதற்கான முழு ஆதாரம் அந்தப் பெண்ணிடம் இல்லை. மாங்காடு ஆரம்ப சுகார நிலையம் மற்றும் முத்துக்குமரன் மருத்துமனைகளில் அவர் சிகிச்சை பெற்ற போது அவர் எச்.ஐ.வி சோதனையே செய்யவில்லை. 

ஆனால் அந்தப் பெண் கொண்டுவந்த ஆவணத்தில் தனக்கு எச்.ஐ.வி இல்லை என  எழுதி வைத்திருந்தார். இதற்கு அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.