தமிழ்நாடு

ஊடகங்கள் உதவியால் மீட்கப்பட்ட குழந்தை: தந்தை உருக்கம்

ஊடகங்கள் உதவியால் மீட்கப்பட்ட குழந்தை: தந்தை உருக்கம்

Rasus

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

கொடுங்கையூரைச் சேர்ந்த பரகத்துல்லாவின் மூன்று வயது மகன் முகமது ஆசிப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக பரகத்துல்லா நேற்று அங்கு வந்துள்ளார். மருத்துவமனையின் புறநோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டு வாங்குவதற்காக, அவர் வரிசையில் நின்றிருந்த போது திடீரென முகமது ஆசிப்பை காணவில்லை. எங்கு தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் போலீசில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் அங்குள்ள சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மருத்துவமனையில் இருந்து குழந்தையை பெண் ஒருவர் அழைத்து செல்வது போன்ற சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டிருந்தனர். இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி இருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள், கொடுங்கையூரில் குழந்தை ஒன்றுடன் பெண் ஒருவர் டீ அருந்திக் கொண்டிருப்பதை கண்டுள்ளனர். போலீசார் வெளியிட்டிருந்த சிசிடிவி காட்சியில் உள்ள பெண் போன்று இவர் இருந்ததால், சந்தேகத்தின் காரணமாக போலீசாருக்கு இதுகுறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து அப்பெண்ணிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை கடத்திய பெண்ணையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட குழந்தை தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செய்தியார்களிடம் பேசிய குழந்தையின் தந்தை, ஊடகங்கள் உதவியால் தான் குழந்தை மீட்கப்பட்டதாக மிகுந்த உணர்வுப்பூர்வமாக பேசினார். மேலும் போலீசாரும் சிறந்த முறையில் முயற்சி செய்து குழந்தையை மீட்டுக்கொடுத்ததாகவும் தெரிவித்தார்.