டாப்சிலிப் வனப்பகுதியில் பின்னங்காலில் காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்ஸ்லிப் அடர் வனப்பகுதியில், பின் காலில் காயம் ஏற்பட்ட 5 வயது பெண் யானை உணவின்றி தவித்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள், யானையின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவக் குழுவுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராம சுப்பிரமணியம் தலைமையில் வனகால்நடை மருத்துவ குழுவினர் டாப்ஸ்லிப் விரைந்தனர். டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உள்ள கும்கி யானைகள் உதவியோடு, வனத்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து பூசி முதலுதவி செய்து சிகிச்சை அளித்தனர். பின்னர் யானைக்கு வாழைப்பழம் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து காயமடைந்த யானையை வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமுக்கு கொண்டு சென்று, காயம் குணமடையும் வரை கரோல் எனப்படும் மர கூண்டில் அடைத்து, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.