தமிழ்நாடு

“ரஜினி விரைவில் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்”- கி.வீரமணி

“ரஜினி விரைவில் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்”- கி.வீரமணி

Rasus

ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 14-ஆம் தேதி துக்ளக் இதழின் 50-ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதில் 1971-இல் சேலத்தில் நடந்த நிகழ்வு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினிகாந்த் மீது புகாரளிக்கப்பட்டது. மேலும், ரஜினிகாந்த் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ரஜினிகாந்த் விளக்கமளித்தார். “ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். எனவே 1971-இல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ ரஜினி சொன்னது எதுவுமே உண்மையில்லை. இப்போது கருத்துகளை மாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு அவர் வந்திருக்கிறார். வேறு ஒரு பத்திரிகையை ஆதாரமாகக் காட்டி 1971-ல் வந்ததை 2017-ல் outlook பத்திரிகையில் வந்ததாக சொல்கிறார். பெரியார் பற்றி  உண்மைக்கு மாறான தகவலை ரஜினி சொல்லியிருக்கக் கூடாது

ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க முடியாது; நான் சொன்னால் சொன்னதுதான் என்று சொல்கிறார். ஒருவர் தவறை சுட்டிக் காட்டுகிறபோது மன்னிப்பு கேட்பது பெருந்தன்மை. அது மனித பண்பாடு. ஆனால் அதே நேரத்தில் கேட்பதும், கேட்காததும் அவருடைய உரிமை. அவர் உரிமைகளில் தலையிடுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. அவர் தன்னை அடையாளப்படுத்திக் காட்டுவதற்கு பயன்படும் அவ்வளவுதானே தவிர வேறு எதுவும் கிடையாது

பெரியாரை பற்றி தவறான தகவலை பரப்பி பிரச்னைகளை உருவாக்குவதற்கு எந்த உரிமையும் கிடையாது. ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வருகிறது. அப்போது அதற்கு உரிய ஆதாரங்களோடு சொல்லவேண்டும். ஏற்கெனவே இந்த பிரச்னை அப்போதே எழுப்பப்பட்டு உயர் நீதிமன்றத்திலேயே தெளிவாக பதில் சொன்ன தீர்ப்புகள் இருக்கின்றன. இதுதான் உண்மை” என தெரிவித்தார்.