தமிழ்நாடு

"பெண்களுக்காக போராடி, குரல் கொடுக்கும் எனக்கு.. அங்கீகாரம் கிடைத்துள்ளது"-குஷ்பு மகிழ்ச்சி

"பெண்களுக்காக போராடி, குரல் கொடுக்கும் எனக்கு.. அங்கீகாரம் கிடைத்துள்ளது"-குஷ்பு மகிழ்ச்சி

webteam

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி ஏற்ற பின், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்துவேன்” என குஷ்பு தெரிவித்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இன்று பதவியேற்றார் குஷ்பு. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டதை என் வாழ்வின் புது ஆரம்பமாக உணர்கிறேன். பெண்களுக்காக போராடி, குரல் கொடுத்து பேசி வரும் எனக்கு அங்கீகாரம் வழங்கியது போல் உள்ளது. இதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். பெண்களுக்காக செய்ய விரும்புவதை செய்யவும், பெண்களுக்காக பேச, அவர்களுக்கு தைரியம் கொடுக்க மிக பெரிய தளம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உலக அளவில் அதிகமாக இருந்தாலும், இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க என்னால் என்ன முடியுமோ அதை செய்வேன். சமூக ஊடகங்கள் வாயிலாக வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செய்திகள் மட்டுமே வெளி உலகத்திற்கு தெரிய வருகிறது. இதைத் தவிர்த்தும் அதிக அளவில் வன்கொடுமை நடைபெற்று வருகிறது.

பல பாதிக்கப்படும் பெண்கள், நீதிமன்றம் செல்லவும், காவல் நிலையம் சென்று புகார் அளிக்கவும் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லுவது இது மட்டும் தான் - `பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும். பாதிக்கப்படும் பெண்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திலிருந்து என்னை தேர்ந்தெடுத்த உள்ளனர். கண்டிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் தொடர்பாக அதிகம் பேசுவேன்’ ” என்று கூறினார்.