கேரளாவில் பேருந்தில் சில்மிஷம் செய்துவிட்டு ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓட முயன்றவரை பாதிக்கப்பட்ட பெண்ணே களத்தில் இறங்கி துரத்தி பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சினிமா பாணியில் வீரமிக்க சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்..
கேரளா பத்தினம்திட்டாவை அடுத்த ஏனாத் பகுதியில் கேஎஸ் ஆர் டிசி பேருந்தில் இளம் பெண் ஒருவர் அவரின் உறவினர் பெண் ஒருவருடன் இரவு 7 மணியளவில் ஆத்தூரில் இருந்து கொட்டாரக்கரா பகுதிக்கு பயணம் செய்துள்ளார்.
இவர்கள் பயணம் செய்த பேருந்து கூட்டமாக இருந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஷனீர் (42) என்பவர் அந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். தொடக்கத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கி முகம் சுழித்துக் கொண்டு நின்றுள்ளார் அந்த பெண். பின்னர், பொருத்து பார்த்த அந்தப்பெண் ஒரு கட்டத்தில் ஷனீரை கன்னத்தில் அறைந்துள்ளார். மற்ற பயணிகளிடமும் ஷனீர் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டது பற்றி தைரியமாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து பேருந்தில் உள்ள மற்ற பயணிகள் நடத்துநரிடம், ஷனீரை போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறவே, பயத்தில் ஷனீர் பேருந்துலிருந்து இறங்கி ஓட முற்பட்டுள்ளார். அதற்குள் நடத்துநர் பேருந்தின் இரு கதவுகளையும் மூடவே, ஷனீரால் பேருந்துவிலிருந்து தப்பிச் செல்ல முடியவில்லை.
இந்நிலையில், புதுசேரிபாகா பெட்ரோல் நிலையம் அருகே பேருந்து சிக்னலுக்காக நின்றது. அப்பொழுது ஷனீர் பேருந்தின் கண்ணாடி ஜன்னலை கழற்றிவிட்டு அதன் வழியாக வெளியே குதித்து தப்பி ஓடியுள்ளார்.
இதைக்கண்ட அந்தப் பெண் சற்றும் யோசிக்காமல் ஷனீரை விடாது துரத்திபிடிக்க நினைத்து, தானும் பேருந்தை விட்டு இறங்கியுள்ளார். தப்பி ஓடிய ஷனீரை விரட்டி விரட்டி துரத்தி சென்று ஒருவழியாக பிடித்துள்ளார். அதற்குள் பேருந்திலிருந்த வந்த சிலரும் ஷனீரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பிறகு அதே பேருந்தில் ஏறி அப்பெண் தனது இருப்பிடம் சென்றார். போலிசார் ஷனீர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.