தமிழ்நாடு

திருமணத்திற்கு மீறிய உறவு; கையில் இருந்த பணம் காலி - காதலியுடன் விஷமருந்திய காவலர்

திருமணத்திற்கு மீறிய உறவு; கையில் இருந்த பணம் காலி - காதலியுடன் விஷமருந்திய காவலர்

webteam

கன்னியாகுமரி அருகே காவலர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடன் விடுதி அறையில் தங்கியிருந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

கடந்த 6-ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த போஸ்(40) என்ற காவலர் சுப்ரியா(30) என்ற பெண்ணுடன் கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில், அறை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இருவரும் இணைந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

இதனிடையே கன்னியாகுமரி வாவத்துறை பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஒருவரின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். அப்போது இறந்தவரின் சட்டை பையில் இருந்த ஆவணங்களை பார்த்தபோது அவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வந்த போஸ் என்பதும் அவர் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் தனியார் விடுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு சுப்ரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மீட்கப்பட்ட போஸின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “போஸும் சுப்ரியாவும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளனர். சுப்ரியா தனது கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த நிலையில், போஸுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த இருவரது குடும்பத்தினரும் அவர்களை கண்டித்துள்ளனர். அதனால் அவர்கள் ஒருமாதத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி கன்னியாகுமரி வந்த இருவரும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர், கையில் இருந்த பணம் தீர்ந்ததால் இருவரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்” எனத் தெரியவந்துள்ளது.