தமிழ்நாடு

கேரளா: சுற்றுச்சூழல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முழு அடைப்பு போராட்டம்

கேரளா: சுற்றுச்சூழல் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முழு அடைப்பு போராட்டம்

kaleelrahman

கேரளாவில் இடுக்கி, வயனாடு ஆகிய மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கட்டாய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இடுக்கி மற்றும் வயனாடு மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) சார்பில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 12 மணி நேர முழு அடைப்பை ஒட்டி இடுக்கி மற்றும் வயனாடு மாவட்டங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

தனியார் பேருந்துகள், ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் முடங்கியுள்ளது. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் கேரள அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பையொட்டி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேயிலை, ரப்பர், ஏலக்காய் உள்ளிட்ட தோட்டங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்திற்குச் செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு அவை தமிழக எல்லையான குமுளி கம்பம் மெட்டு போட்டு வரையே இயக்கப்படுகின்றன. இந்த முழு அடைப்பால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.