செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி பழங்குடி கிராமத்தில் கேரளா பதிவெண் கொண்ட 3 வாகனங்கள் நேற்று மாலை வந்துள்ளன.
இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்கள் அங்குள்ள பழங்குடியின கிராமத்தில் வசிக்கும் சுமார் 13 மற்றும் 14 வயதுடைய 3 சிறுமிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி சிறுமிகளை மீட்டுள்ளனர்.
இரண்டு வாகனத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், மற்றொரு வாகனத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் இருந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த காவல்துறையினர், கேரள தம்பதிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், 3 சிறுமிகளையும் கேரள மாநிலத்திற்கு வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதே போல வேறு பழங்குடியின சிறுமிகள் யாரேனும் கேரளாவிற்கு வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.