தமிழ்நாடு

பணத்திற்காக உடலுறுப்பை திருடிய மருத்துவமனை - தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்

பணத்திற்காக உடலுறுப்பை திருடிய மருத்துவமனை - தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்

webteam

கேரளாவை சேர்ந்தவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு, கட்டணத்திற்காக உடலுறுப்பை திருடிய சேலம் மருத்துவமனை மீது கேரள முதலமைச்சர் புகார் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கில்லிகுரிஷி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஓட்டுநரகாக இருந்த இவர், 6 பேருடன் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது மீனாட்சிபுரம் அருகே அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மே 22ஆம் தேதி மணிகண்டன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம், அவரின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளது. அத்துடன் மருத்துவக் கட்டணமாக ரூ.3.25 லட்சம் கேட்டுள்ளது. உறவினர்கள் பணமில்லை எனக்கூற, மணிகண்டன் உடலுறுப்புகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, உடலை உறவினர்களிடம் அளித்துள்ளது. உடலுறுப்புகளை எடுப்பதற்கு முன்னர், உறவினர்களிடம் கட்டாயமாக கையெழுத்து பெற்றுள்ளது. இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், மணிகண்டன் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர், உடலுறுப்புகளை பறித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மிருகத்தனமான செயலை செய்த அந்த மருத்தவமனைக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு, பினராயி விஜயன் கடிதமும் எழுதியுள்ளார்.

(தகவல்கள் : பாலாஜி, புதிய தலைமுறை செய்தியாளர், தேனி)