நாமக்கல் என்கவுன்ட்டர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

நாமக்கல்: கன்டெய்னர் லாரியில் ரூ. 66 லட்சம்... ATM கொள்ளை பணமா? ஒருவர் என்கவுன்ட்டர்; 5 பேர் கைது!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்கள் வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து, அதில், கொள்ளையர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் 50 லட்சத்திற்கு அதிகமான பணம், கார் இருப்பது கண்டறியப்பட்டதுள்ளது.

PT WEB

கேரளாவிலிருந்து கட்டுக்கட்டாக கன்டெய்னரில் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை நாமக்கல் குமாரப்பளையம் அருகே வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில், என்கவுன்ட்டரில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது. அந்த கன்டெய்னர் எங்கும் நிற்காமல் சென்றதால், காவல்துறையினர் துரத்திச் சென்று மடக்கி பிடித்துள்ளனர்.

அப்போது, கன்டெய்னரை திறந்து பார்த்தபோது, அதில் 7 கொள்ளையர்கள், ஒரு சொகுசு கார் மற்றும் கட்டுக்கட்டாக பணம் (ரூ 66 லட்சம்) இருந்துள்ளது. போலீசாரை கண்டதும், அவர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். மற்ற 6 பேரில் ஒருவர் தப்பியோடிய நிலையில், 5 பேர் கைதாகி உள்ளனர். ஐவரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பிடிபட்ட லாரி ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்டது; லாரிக்குள் இருந்த காரில் நம்பர் பிளேட் இல்லை.

இப்பணம் கேரள மாநிலத்தில் திருச்சூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 ஏடிஎம்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு விரைகிறது தனிப்படை. இதனால் சம்பவம் நடந்த பகுதி பரபரப்புடனே காணப்படுகிறது.