கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் குறித்து அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு கிடையாது எனவும், வழக்கம் போல் போராட்டம் தொடரும் எனவும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் திருமங்கலம் பகுதி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையையும் அமல்படுத்தியதால் இது தொடர்பாக திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி கட்டண விலக்கு அளித்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில், திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி திருமங்கலம் வாகன உரிமையாளர்களுக்கு மாதாந்திர கட்டணமாக ரூபாய் 310 என நிர்ணயம் செய்து நோட்டீஸ் அனுப்பியது.
இவை தவிர பல ஆண்டுகளாக திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்றதாகவும், எனவே அபராத தொகையுடன் பாக்கித்தொகையை செலுத்த வேண்டும் என கூறியும் ஒவ்வொரு வாகன உரிமையாளருக்கும் லட்சக்கணக்கில் சுங்க கட்டண தொகை நிர்ணயம் செய்து நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிருப்தியடைந்த திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள், வாகன வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு அமைப்பு அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கடைப்பிடித்ததால் செவ்வாய்க்கிழமை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் நகர் பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடையடைப்பு போராட்டம் 100% வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “தேசிய நெடுஞ்சாலை துறையிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. வழக்கம்போல் திருமங்கலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளோம்” என தெரிவித்தார். இந்நிலையில் திருமங்கலம் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில், “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையிலான பேச்சுவார்த்தையில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை. உள்ளூர் கட்டணங்களுக்கு விலக்கு என அமைச்சர் அறிவித்துள்ளது தற்காலிக தீர்வு மட்டுமே. நிரந்தர தீர்வு கிடையாது; நிரந்தர தீர்வு மட்டுமே எங்களுக்கு பலனை அளிக்கும். எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிடப் போகிறோம். முற்றுகை போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது” என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் தொடர்கிறது.