தமிழ்நாடு

கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளை நிறுத்தவில்லை: மத்திய அரசு விளக்கம்

கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளை நிறுத்தவில்லை: மத்திய அரசு விளக்கம்

webteam

கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை நிறுத்தவில்லை என மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வந்த மத்திய தொல்பொருள் துறை 2016ல் தனது பணியை நிறுத்தியது. இதையடுத்து கீழடியில் நடைபெற்று வந்த ஆராய்ச்சி பணியை தொடர்ந்து மேற்கொண்டு தமிழ் மண்ணின் பாரம்பரிய அடையாளத்தை காக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த விவகாரம் குறித்து பேசிய திருச்சி சிவா, 3 ஆம் நூற்றாண்டின் அறிய பொக்கிஷமான கீழடி குறித்த அகழ்வாராய்ச்சிப் பணிகளை மத்திய தொல்லியல் துறை தொடர வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய சுற்றுலா கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளை நிறுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி பணிகள் குறித்து ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது எனவும் அதனால் அந்த இடத்தில் தொல்லியல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி பணிகள், மேற்கொண்ட ஆய்வுகள் மக்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் மகேஷ் சர்மா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.