பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு pt desk
தமிழ்நாடு

இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு - விருது வழங்கி பாராட்டிய சுற்றுலாத்துறை

இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு, மத்திய சுற்றுலாத்துறை விருது வழங்கியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

டெல்லியில் இந்திய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர், அலுவலர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்,

விருது வழங்கி பாராட்டிய சுற்றுலாத்துறை

இதையடுத்து இந்த விழாவில் சாகச சுற்றுலா, வேளாண் சுற்றுலா, சமூக சுற்றுலா, கைவினை சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா உள்ளிட்ட தலைப்புகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டது. இதில், தமிழகத்திற்கு 2 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலம் எனும் பிரிவில் கீழடிக்கு விருது வழங்கப்பட்டது.

இவ்விருதினை துணை குடியரசுத் தலைவரிடம் இருந்து கீழடி ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கட சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். மேலும் ஆன்மிக சுற்றுலா தலமாக நாமக்கல் மாவட்டம் மேலகலிங்கம்பட்டி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.