தமிழ்நாடு

வாணியம்பாடி: கொல்லப்பட்ட மஜக நிர்வாகி குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் நிதியுதவி

வாணியம்பாடி: கொல்லப்பட்ட மஜக நிர்வாகி குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் நிதியுதவி

Sinekadhara

வாணியம்பாடியில் கடந்த மாதம்10ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் 5 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே சான்று என வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டியளித்திருக்கிறார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த மாதம் செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6.49 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் வீட்டின் அருகிலுள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தனது 7 வயது மகனுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கஞ்சா பதுக்கல் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த டீல் இம்தியாஸ் உட்பட கூலிப்படையினர் 21 பேரை தற்போதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென அறிவித்திருந்தனர். இதனையடுத்து இன்று முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கே.சி.வீரமணி, ’’சமூக ஆர்வலரும், மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் நிர்வாகியுமான வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில்  கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பது அவர்களுடைய குடும்பத்தினருக்கு பேருதவியாக இருக்கும். சிறுபான்மையின மக்களுக்கும் அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே சான்று. இது திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு முதல்வர் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்’’ என வலியுறுத்தினார்.