விபத்துக் காட்சி pt web
தமிழ்நாடு

”தொழில்நுட்ப கோளாறு அல்ல; கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற இதுதான் காரணம்”- விசாரணையில் பகீர் தகவல்

சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி, எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி, சேலம் ரயில்வே டிஎஸ்பி ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த ரயில் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜெ.அன்பரசன்

செய்தியாளர். ஜெ.அன்பரசன்

தண்டவாளத்தில் இருந்த போல்ட் நட்டுகள், ஜங்ஷன் பாயிண்ட்டுகள் காணாமல் போனதே கவரைப்பேட்டை ரயில் விபத்து நடைபெற காரணம்.

சென்னை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த 11ஆம் தேதி இரவு லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலானது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்(NIA), ரயில்வே போலீசார் என தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்வே போலீஸ் விசாரணையில் வெளிவந்த தகவல் என்ன?.

சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி, எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி, சேலம் ரயில்வே டிஎஸ்பி ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த ரயில் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 15 ரயில்வே ஊழியர்களிடம் கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் சம்மன் அளித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர், டெக்னிக்கல் டீம், சிக்னல் டீம், தண்டவாளபராமரிப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 15 ஊழியர்களை இதுவரை ரயில்வே போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கவரப்பேட்டையில் மூன்று நட்டு போல்டுகள், பொன்னேரியில் 6 நட்டு போல்டுகள் கழட்டுப்பட்டுள்ளதும் சில இடங்களில் ஜங்ஷன் பாயிண்டுகள் காணமல் போனதும் ரயில்வே போலீசாரின் விசாரணையில் தெரியவந்த நிலையில் விபத்துக்கு இவை காரணமாக இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ரயில்வே போலீசாரின் விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை என்பதும் தண்டவாளத்தில் நட்டு, போல்ட் மற்றும் ஜங்ஷன் பாயிண்ட் காணாமல் போனதால் மட்டுமே ரயில் விபத்து நிகழ்ந்துள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ட்ராக் மாறும் இடத்தில் உள்ள நட்டு போட்ல்டுகள் கழட்டப்பட்டுள்ளதால் இரண்டு ட்ராக்குகள் மாற்றும்போது செயல்படாமல் இருந்துள்ளதாகவும் இதனால், ரயில் தடம் மாறி சென்று விபத்து ஏற்பட்டதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து நிகழ்ந்தவுடன் ரயில் பெட்டிகள் ஒன்றன்மீது ஒன்று விழும் தன்மை இல்லாமல் விபத்துக்குள்ளான பாக்மதி ரயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருப்பாதகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர்: சரக்கு ரயில் - பயணிகள் ரயில் விபத்து

நட்டு போல்ட் மற்றும் ஜங்ஷன் பாயிண்டுகளை கழட்டியது யார்? என்பது குறித்து சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நபர்கள், இரும்பு திருடும் கும்பல், திருடிய இரும்பை விற்பனை செய்யும் காயலாங்கடை, அப்ரண்டீஸ் வேலைக்காக போராடி வரும் நபர்கள் என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.