ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுமாயின், அது நிரந்தரத் தீர்வாக அமையும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவர உரிமை உள்ளது என்று தொடக்கம் முதலே கூறி வந்தவர் மார்க்கண்டேய கட்ஜூ.
இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கட்ஜு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள சமூக வலைத் தளங்கள் மூலமாகவும், இமெயில் மூலமாகவும் அழைப்புகள் வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மனைவியில் உடல் நலம் சரியில்லாத சூழலில் தன்னால் அந்த அழைப்புகளை ஏற்க முடியவில்லை என்றும் கட்ஜூ தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். அதே நேரம் தமிழக மக்களின் இந்த வெற்றிக்காக மனதார மகிழ்ச்சி கொள்வதாகவும், தமிழர் வாழ்க என்றும் கட்ஜூ தனது பதிவில் கூறியுள்ளார். இந்த அவசரச் சட்டம் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்று நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ள கட்ஜூ, இந்த சட்டத்துக்கு தமிழக சட்டப்பேரவை ஒப்புதல் அளிக்குமாயின், அது நிரந்தர சட்டமாகும் என்று தெரிவித்துள்ளார்.