தமிழ்நாடு

“என் மகன் இறந்துவிட்டானா..?”வலியுடன் கேட்கும் சுப்ரமணியனின் தந்தை

“என் மகன் இறந்துவிட்டானா..?”வலியுடன் கேட்கும் சுப்ரமணியனின் தந்தை

webteam

தனது மகன் காயபட்டுள்ளானா ? அல்லது இறந்துவிட்டானா ? என தூத்துக்குடி சுப்ரமணியனின் தந்தை வலியுடன் கேட்டிருப்பது, அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இந்திய உட்பட உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட உலக நாடுகள் பலவும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட அனைத்து தலைவர்களும் இரங்கல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அத்துடன் அனைவருமே உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

இதற்கிடையே உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த கணபதி என்பவரது மகன் சுப்ரமணியன் (28) எனப்படுகிறது. ஐடிஐ படித்துள்ள சுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிஆர்பிஎப் படையில் சேர்ந்தார். உத்திரபிரதேசத்தில் தனது பணியை ஆரம்பித்த சுப்பிரமணியன் சென்னை மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகிறது. 

தைப்பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த ஞாயிறுக்கிழமை தான் ஊரிலிருந்து சிஆர்பிஎப் பணிக்காக மீண்டும் கிளம்பி சென்றுள்ளார். நேற்று மதியம் 2 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து, தான் வேலைக்கு செல்வதாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்கொலை படைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் குடும்பத்திற்கு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் குழப்பமான சூழ்நிலை இருப்பதாகவும், அரசு உறுதிப்படுத்தி தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரமணியின் தந்தை கணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், “எனது மகன் காயம்பட்டுள்ளானா ? அல்லது இறந்துவிட்டானா ? என அவர் வலியுடன் கேட்டுள்ளார். நேற்று முன்தினம் தான் போனில் பேசினேன். எங்களுக்கு அரசு தரப்பிலிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை” என கணபதி வலியுடன் கேட்பது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.