ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக அளவிலான குத்துச்சண்டை போட்டியில் விளையாட தகுதி பெற்றும் நிதிவசதி இல்லாததால் போட்டிக்கு செல்ல முடியாத நிலை, கரூரை சேர்ந்த பாக்ஸிங் வீரருக்கு ஏற்பட்டுள்ளது.
கரூரை சேர்ந்தவர் மதன் (25). பாக்ஸிங் வீரரான இவர், கரூரில் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு பாக்ஸிங் பயிற்சி அளித்து வருகிறார். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் அண்மையில் இந்திய அளவில் நடைபெற்ற பாக்ஸிங் தகுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து இவர், வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.
இந்த குத்துச்சண்டை போட்டியில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பாக்ஸிங் போட்டியில் கலந்துகொள்ள கரூரைச் சேர்ந்த பாக்ஸிங் வீரர் மதனுக்கு வாய்ப்பு கிடைத்தும் நிதிவசதி இல்லாததால் அந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார வசதியின்றி போட்டியில் வெற்றிபெற கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுவரும் பாக்ஸிங் வீரர் மதனுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.