கரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கண்ணாடி, வெள்ளைத் தொப்பி அணிவித்து வாழும் புரட்சித் தலைவரே என்ற வாசகத்துடனும், பாகுபலியாக சித்தரித்து அதிமுக நிர்வாகி வைத்த கட் அவுட்களை பொதுமக்கள் ரசித்துச் செல்கின்றனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் 'நலத்திட்டங்களின் நாயகர்' 'குடிமராமத்து நாயகர்' என்ற அடை மொழியுடன் போஸ்டர்களும், கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூர் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராகவும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராகவும் இருக்கும் முத்துக்குமார் என்பவர் ஒருபடி மேலேபோய் எடப்பாடி பழனிசாமிக்கு கருப்புக் கண்ணாடியும் வெள்ளைத் தொப்பியுடன் படத்தைப் போட்டு 'வாழும் புரட்சி தலைவரே' என்ற வாசகத்துடன் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் கட்-அவுட் வைத்துள்ளார்.
இதேபோல, அமராவதி ஆற்றங்கரையில் எடப்பாடி பழனிசாமி படத்தை டிஜிட்டல் முறையில் பாகுபலியாகவே மாற்றி பிரம்மாண்ட கட்-அவுட் வைத்துள்ளார். இந்த இரண்டு கட்-அவுட்டை 'அட' என ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.