தமிழ்நாடு

கரூர்: சுடுகாட்டை மீட்டுத்தரக் கோரி போராடியபோது மயங்கி விழுந்து இறந்த நபர்

கரூர்: சுடுகாட்டை மீட்டுத்தரக் கோரி போராடியபோது மயங்கி விழுந்து இறந்த நபர்

நிவேதா ஜெகராஜா

கரூரில் சுடுகாடு பிரச்னை தொடர்பான போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர், 'சுடுகாடு பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் - இறந்த நபரின் குடும்பத்துக்கு உதவி செய்யப்படும்' என்று உறுதியளித்ததை தொடர்ந்து, அங்கு சற்று பதற்றம் குறைந்தது.

கரூர் மாட்டம், நெரூர் அருகேயுள்ள வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துவருவதாகக் கூறி, பாதையை மீட்டுத் தருமாறு நேற்று இரவு நேரத்தில் சுடுகாட்டில் குடியேறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், மக்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை 10.30 மணி அளவில் சம்பவ இடத்தில் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் பாதையை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேடிச்சிபாளையம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து மகன் வேலுசாமி  (வயது 43) என்பவர் திடீரென மயங்கி விழுந்து, அங்கேயே உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்து வந்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக போராட்டத்தை கைவிடுமாரும், இப்போராட்டத்தில் உரிய தீர்வு எட்டப்படும் என்றும் அறிவுறுத்தினர். போராட்டத்துக்கான தீர்வு தொடர்பான உறுதியுடன், வேலுசாமியின் குடும்பத்திற்கும் அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியதன் பேரில் மக்கள் இறுதியாக போராட்டத்திலிருந்து கைவிட்டனர்.

தொடர் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.