தமிழ்நாடு

கருணாநிதி முதல் உதயநிதி வரை : திமுகவின் 7 பேர்..!

கருணாநிதி முதல் உதயநிதி வரை : திமுகவின் 7 பேர்..!

webteam

திமுக கட்சியில் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு அக்கட்சியின் தலைவரானார் மு.கருணாநிதி. இதுவரை திமுகவில் கருணாநிதியின்
குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் முக்கிய பொறுப்புகளையும், மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்துள்ளனர். 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி :

திராவிட கழகத்திலிருந்து உடைந்த திமுகவை அறிஞர் அண்ணா தலைமையேற்று நடத்தினார். அவர் கட்சி தொடங்கினாலும், தங்கள்
கட்சியின் தலைவர் பொறுப்பு என்றும் அண்ணாவிற்காக காலியாக இருக்கும் என்று கூறி, அந்த பதவியை அவரும் ஏற்றுக்கொள்ளாமல்,
யாரையும் அமர வைக்காமல் இருந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவில் பல கூச்சல்கள் ஏற்பட்டது. அதன்பின்னர்
தற்காலிக முதலமைச்சராக நெடுஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் கருணாநிதி முதலமைச்சரானார். அதைத் தொடர்ந்து அவரே
திமுகவின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் :

கருணாநிதியை தொடர்ந்து தற்போது இருக்கும் உதயநிதி வரை திமுகவில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் முக்கிய
பொறுப்புகளை பெற்றுள்ளனர். இதில் கருணாநிதியின் அக்கா மகனான முரசொலி மாறன் தான் முதலில் காலெடுத்து வைத்தார்.
திமுகவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அத்துடன் மக்களவை உறுப்பினராகவும், மத்திய வர்த்தக மற்றும்
தொழில்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். 

திமுகவின் தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின்:

கருணாநிதியின் மகன் என்ற பெரும் அறிமுகத்துடன் அரசியலுக்குள் நுழைந்தார். திமுகவில் இவருக்கு ஆரம்பத்திலேயே செல்வாக்கு
இருந்தது. இளைஞரணித் தலைவர், சென்னையின் மேயர், துணை முதலமைச்சர், திமுகவின் பொருளாளர் மற்றும் செயல்தலைவர்
என படிப்படியாக வளர்ந்தார். 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை துணை முதலமைச்சராக இருந்தவர். 2016ஆம் ஆண்டு
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு திமுகவின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் :

முரசொலி மாறனின் மகனான இவர், திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2014ஆம் மக்களவைத் தோல்வியை
சந்தித்தார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்வு
செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராகவும், ஜவுளித்துறை அமைச்சராகவும் பொறுப்பு
வகித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி :

கருணாநிதியின் மகனும், மு.க.ஸ்டாலினின் அண்ணனுமான இவர் மதுரை மாவட்டத்தின் முக்கிய புள்ளியாக திகழ்ந்தவர். திமுகவின்
தென் மண்டல அமைப்புச் செயலாளராக பதிவி வகித்தார். 2009ஆம் ஆண்டு நடைபெற்று மக்களவைத் தொகுதியில் மதுரையில்
போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதைத்தொடர்ந்து சில
காரணங்களால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.  

கனிமொழி எம்.பி :

கருணாநிதியின் மகள் ஆவார். 2007ஆம் ஆண்டு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து
2013ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மாநிலங்களை எம்.பி ஆனார். அதைத்தொடர்ந்து திமுகவின் மகளிரணிச் செயலாளர்
பதவியில் நியமிக்கப்பட்டார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக வெற்றி
பெற்றார். அத்துடன் திமுகவின் மக்களவைத் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.

திமுகவின் தற்போதைய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் :

இவர் மு.க.ஸ்டாலின் மகன் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து மக்களிடம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து முரசொலி
நாளிதழின் அரங்காவலராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே திமுகவின் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றார். அத்துடன்
பிரச்சாரங்களிலும் பங்கேற்று வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.