புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் கோரிக்கை குறித்து வருவாய்த் துறை செயலர் சட்டத்துக்கு உட்பட்டு உரிய முடிவு எடுக்கலாம் எனக்கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை முடித்து வைத்தது
புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி, 5 முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். உலகிற்கு முன்னுதாரணமாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினார். தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவர் உலகத் தமிழர்களின் நலனுக்காக பணியாற்றியவர். அவரது நினைவையும், சமூக பணியையும் போற்றிடும் வகையில் புதுக்கோட்டை நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் கலைஞருக்கு சிலை வைக்க இளைஞரணி சார்பில் முடிவு செய்துள்ளோம்.
இதற்காக புதுக்கோட்டை நகர் பகுதியில் ஒரு இடத்தை தேர்வு செய்து அனுமதிக்குமாறு புதுக்கோட்டை கலெக்டர், நகராட்சி கமிஷனர் மற்றும் எஸ்பி ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம். அந்த மனுவை அதிகாரிகள், வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலருக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆனால், இதுவரை அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு எனது மனுவை பரிசீலித்து கலைஞருக்கு சிலை வைக்க அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'கலைஞரின் சிலை வைக்க அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி மனுதாரரின் மனுவை தமிழக அரசின் வருவாய்த்துறை செயலர் சட்டத்துக்கு உட்பட்டு உரிய பரிசீலனை செய்து உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.