தமிழ்நாடு

காவிரி மகா புஷ்கர விழா: ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

காவிரி மகா புஷ்கர விழா: ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

Rasus

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கர விழாவின் நான்காம் நாளான இன்றும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். 

கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மகா புஷ்கர திருவிழா வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் காவிரி மகா புஷ்கர விழாவின் நான்காம் நாளான இன்றும் ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறையில் புனித நீராடினர். இதற்காக தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

இதுதவிர, துலாக்கட்ட காவிரிக் கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர். இதில் காஞ்சி சங்கராச்சாரியார்கள், மற்றும் தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதினகர்த்தர்கள் பங்கேற்றனர். இது தவிர பல்வேறு சைவ சமய மடாதிபதிகளும் மயிலாடுதுறையில் முகாமிட்டு புஷ்கர விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் நாளை ஏகாதசி என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதோஷம், மஹாளய அமாவாசை ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் வருவதால் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது