தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மாணவர்கள் வாழ்வில் திராவிடம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வில் திராவிடம் என்ற தலைப்பில், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கவிஞர் பர்வீன் சுல்தான், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட திமுகவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்தரங்க பார்வையாளர்களாக கலந்துக் கொண்டனர்.
கருத்தரங்கத்தில் கரு.பழனியப்பன் பேசுகையில், ''அடுத்த தலைமுறையினரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு படிக்க வைக்கிறது என்பதால்தான் எதிரிகள் பதறுகிறார்கள். வேதம் மந்திரத்தை மட்டுமே கற்றுக்கொடுகிறது. கல்வி மட்டுமே மனித நேயத்தை கற்றுக் கொடுக்கிறது. மாணவர்களுக்கு மனித நேயத்தை கற்றுக் கொடுப்பது பற்றியே எப்பொழுதும் திமுக அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு அரசியலை கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அரசின் திட்டங்கள் எதிர்கால சந்ததியினருக்கு எதிராக அமையும் போது, அதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர்கள் பெரியாரும், அண்ணாவும், கலைஞருமாக இருந்துள்ளனர். அவர்களது பாதையில் தற்போது மு.க.ஸ்டாலின் பயணிக்கிறார்.
ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிலைநாட்ட, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, கல்லூரி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, பெண்களுக்கு சம சொத்துரிமை இவற்றையெல்லாம் திராவிட அரசு சாத்தியமாக்கி கொடுத்துள்ளது.” என்றார்.
பின்னர் பர்வீன் சுல்தான் பேசுகையில், ''இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பா பூலே. இவர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், பெண்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பாடுபட்டார். அவரது பிறந்த தினமான ஜனவரி 3ஆம் நாளை, ஆசிரியர் தினமாக அரசு அறிவிக்க வேண்டும். அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆசிரியர்களுக்கு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொடுக்க வேண்டும்.” என்ற கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தினார்.
இந்த பேச்சை மேடையில் அமர்ந்து தெளிவாக கேட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்கள் சார்பில் பர்வீன் சுல்தான் முன்வைத்த கோரிக்கையை அரசு பரிசளிக்கும் என்று தெரிவித்துவிட்டு கருத்தரங்கத்தை நிறைவு செய்தார்.