கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்டு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சரணடைந்தார்.
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டு மாநில குழு உறுப்பினர் திருமதி பிரபா என்கிற சந்தியா தமிழக காவல் துறையிடம் சரணடைதிருப்பதாக வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி.பாபு தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்... கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டு திருமதி.பிரபா என்கிற சந்தியா, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் மீது 44 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அமைதியான வாழ்க்கை வாழ விருப்பம் தெரிவித்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணனிடம் நேற்று சரணடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரை மறுவாழ்வு நிதியாக வழங்கவும், மாதம் மாதம் ரூபாய் 4000, மூன்றாண்டுகளுக்கு உதவித் தொகையாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார்.
இவர் வேலூரில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார். தலைமறைவு மாவோயிஸ்டுகள் மனந்திருந்தி தீவிரவாத நடவடிக்கைகளை கைவிட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் நபர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து மறுவாழ்வு அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.