சொத்துக்குவிப்பு வழக்குக்காக செலவழித்த தொகையை தமிழகத்திடம் கேட்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை கடந்த 2003ம் ஆண்டு முதல் நடந்தது. இதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைத்ததற்கான செலவு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இந்த வழக்குக்காக மட்டுமே 2015ம் ஆண்டு வரை கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி அளவுக்கு செலவானதாகக் கூறப்பட்டது.
கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து வழக்கு உச்சநீதிமன்ற மேல்முறையீடுக்கு சென்றது. இந்த மேல்முறையீட்டு வழக்குக்கான செலவையும் சேர்த்து மொத்த செலவு ரூ.5 கோடிக்கும் மேல் ஆனதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சொத்துக்குவிப்பு வழக்குக்காக செலவிடப்பட்ட தொகையை தமிழக அரசிடம் கேட்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளருக்கு கர்நாடக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக கடிதம் மூலம் தொடர்பு கொள்ளப்படும் என்றும் ஜெயச்சந்திரா தெரிவித்தார்.