காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் ராமநகர் தொகுதியில் குமாரசாமி சுற்றுப்பயணம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் காவிரி நீர் விவகாரத்தில் யார் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்கிறது. ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனக் கூறினார். எனவே தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்காக விரைவில் கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி கடும் வெயில் மற்றும் மழையின்மையால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் குடிக்க நீரின்றி பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நிலத்தடி நீர் முற்றிலும் கீழே சென்றதால் ஆழ்துளை கிணறுகள் மூலமும் தண்ணீர் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர் கிடைத்தால் மட்டுமே ஓரளவுக்காவது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலைக்கு தமிழகம் வந்துள்ளது.