தமிழ்நாடு

சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள்

சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள்

rajakannan

நடிகர் சிம்புவின் கோரிக்கையை ஏற்று கன்னட மக்கள் பலர் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களால் தமிழகமே போர்க்களமாக மாறிவருகிறது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கர்நாட சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்து வருகிறது. கர்நாடக அரசியல் மீண்டும் இருமாநிலங்களுக்கு இடையிலான நீர் பிரச்னையை பெரிதாக்கி வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக போராட்டம் செய்வதாக ஆளும் கட்சியும், பாஜகவும் விமர்சனம் செய்து வருகிறது. 

இத்தகைய சூழலில் தான், சமீபத்தில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிம்பு காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். கர்நாடக மக்கள் தண்ணீர் தர நினைத்தாலும் இடையில் உள்ள அரசியல் தலைவர்கள் அதனை தடுப்பதாகக் கூறினார். அப்போது, அன்பான வழியிலே இந்தப் பிரச்னையை சாதிக்க முடியும் என்று கூறிய அவர், கர்நாடக மக்கள் ஏப்ரல் 11ம் தேதி தமிழக மக்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து காவிரி நீரை கொடுப்போம் என்பதை உறுதி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

சிம்பு சொன்னதற்கு பெரிதாக எதுவும் எதிர்வினை இருக்காது என்றுதான் கூறப்பட்டது. ஆனால், கன்னட மக்கள் பலர் சிம்புவின் அன்புக் கோரிக்கையை ஏற்று தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்கி உருக வைத்துவிட்டனர். தமிழகம் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கும் சிறிய தண்ணீர் பாட்டில்களை சில கன்னட அமைப்புகளே கொடுத்தனர். அதேபோல் பேருந்து ஓட்டுநர்களுக்கும் கொடுத்தனர். 

கர்நாடகாவில் தமிழகர்கள் வசிக்கும் பகுதிகளில் பலருக்கும் தண்ணீர் வழங்கினர். அதேபோல், கர்நாடகாவில் வேலை பார்க்கும் தமிழர்களுக்கும், அங்குள்ள கன்னடர்கள் ஒரு டம்ளர் தண்ணீரை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். தண்ணீர் வழங்கிய போது எடுத்த புகைப்படங்களை மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறனர்.

#UniteForHumanity, #Unitedforhumanity என்ற ஹேக்டேக்கில் பலரும் தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பலர் தங்கள் உணர்வுகளை வீடியோ பதிவுகளாக பதிவிட்டு வருகின்றனர். அதில் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் தமிழக, கர்நாடக அரசியல் கட்சிகளுக்கு எதிராக வெறுப்பை கொட்டித் தீர்த்து வருகின்றனர். இருமாநில மக்களும் ஒற்றுமையுடன் இருக்கவே விரும்புவதாக பலரும் கூறியுள்ளனர்.

அதேபோல், கர்நாடக செய்திதாள்களிலும் சிம்பு விடுத்த கோரிக்கை குறித்த செய்திகள் வெளியாகி இருந்தது. தமிழக மக்களுக்கு தண்ணீர் கொடுக்கும் செய்திகளும் ஊடகங்களில் வெளியானது. சிம்புவின் கோரிக்கைக்கு கர்நாடகாவில் வரவேற்பு இருந்ததையே இதெல்லாம் காட்டுகிறது. 

கர்நாடகாவிற்கு போக மீதமுள்ள நீரை ஏதோ தமிழக மக்கள்  பிச்சை கேட்டு நிற்பதுபோல் அன்று சிம்பு பேசியிருந்தார். தமிழக மக்கள் தங்கள் உரிமைக்காகத் தான் குரல் கொடுத்து வருகிறார்கள். காவிரி நீர் பாயும் அனைத்து மாநிலங்களுக்கும் காவிரியில் சமமான உரிமை உண்டு என அப்போது விமர்சனம் எழுந்தது.