தமிழ்நாடு

எடப்பாடி பயணம் குறித்து ஸ்டாலின் கேள்வி... கராத்தே தியாகராஜன் பதிலடி

எடப்பாடி பயணம் குறித்து ஸ்டாலின் கேள்வி... கராத்தே தியாகராஜன் பதிலடி

Rasus

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்து, முன்னாள் துணை மேயரான கராத்தே தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது 2007-ஆம் ஆண்டில் வெளிநாடு சென்றதைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் விமானம் ஏறும்போதுதான், அவர் வெளிநாடு செல்வது பற்றி அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கே தகவல் தெரியும் எனக் கூறியுள்ள கராத்தே தியாகராஜன், மத்திய அரசின் அனுமதி பெறாமல் ஸ்டாலின் வெளிநாடு சென்றதாக சர்ச்சை எழுந்தது என்பதை நினைவூட்டுவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதில் உள்ள மர்மம் என்ன என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதை ஸ்டாலின் விளக்காமல் தான் வெளிநாடு பயணம் செல்வதை விமர்சிப்பதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், தான் வெளிப்படையாகவே வெளிநாடு பயணம் செல்வதாகவும், குடும்பத்தினருடன் தான் செல்லும் பயணங்களை அரசுடன் ஒப்பிடுவதா? திசை திருப்பும் முயற்சியில் தினை அளவு நன்மையும் விளையாது என தெரிவித்திருந்தார். அத்துடன் முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை, உண்மையான காரணங்களை கூற வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதனிடையே கராத்தே தியாகராஜன் அதிமுகவில் இணைய விருப்பப்பட்டால் அது குறித்து கட்சி முடிவெடுக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் சேர்க்கக்கூடாதவர்கள் பட்டியலில் கராத்தே தியாகராஜன் பெயர் இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்