தமிழ்நாடு

“ராஜீவ் காந்தியின் இரத்தத்தை பார்த்தவன் நான்” - கராத்தே தியாகராஜன்

“ராஜீவ் காந்தியின் இரத்தத்தை பார்த்தவன் நான்” - கராத்தே தியாகராஜன்

Rasus

ராஜீவ் காந்தியின் இரத்தத்தை தான் பார்த்தவன் என்றும் கடைசி வரை காங்கிரஸ்காரனாகவே இருப்பேன் என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, கராத்தே தியாகராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன்,

“நான் பேசிய நாளில் மாவட்ட செயலாளர்கள் பலரும் கூட என் கருத்தையே கூறினர். ஆனால் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என் மீது மட்டும் ஏன் இத்தனை அழுத்தம் கொடுக்கின்றனர். நான் பேசிய கூட்டத்திலேயே காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி இருந்தார். அப்போதே அவர் ஏன் என் பேச்சை கண்டிக்கவில்லை. ஏன் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி மோடியை ஆதரித்து விஜயதரணி எம்எல்ஏ பேசினார். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..?

என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு திமுக மீது பழிபோடுகிறார்கள். ஆனால் உண்மையில் கே.எஸ்.அழகிரிக்கு தெரிந்து தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஒழுங்கீனமாக நடந்துகொண்டாய்’ அதனால்தான் சஸ்பெண்ட் என கே.எஸ்.அழகிரி சொல்ல வேண்டியதுதானே. ஆனால் அதனை சொல்லாமல் திமுக மீது பழிபோடுகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு என்றுமே நான் விசுவாசமாக இருப்பேன். அவருக்குத் தெரிந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா..? இல்லை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபாலே இந்த நடவடிக்கையை எடுத்தாரா எனத் தெரியவில்லை. ப.சிதம்பரத்தை மதிக்கிறேன். நான் என்றுமே ராகுல்காந்தியின் விசுவாசி. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரின் இரத்தத்தை பார்த்தவன் நான். என்றுமே காங்கிரஸ்காரனாகவே இருப்பேன்” எனத் தெரிவித்தார்.