தமிழ்நாடு

”பயன்பாட்டிலிருந்த இடுகாட்டில் தனியார் வேலி அமைப்பதா?”-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்!

”பயன்பாட்டிலிருந்த இடுகாட்டில் தனியார் வேலி அமைப்பதா?”-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்!

webteam

காரைக்குடி அருகே தங்களுக்கு சொந்தமான இடுகாட்டை தனியார் உரிமை கொண்டாடுவதாக கூறி, கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பள்ளத்தூர் கொத்தரி கிராமத்தில் உள்ள புது குடியிருப்பு, பழைய குடியிருப்பு பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட முத்தரையர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவர்கள் பயன்பாட்டில் இருந்துவந்த இடுகாட்டை சில தனி நபர்கள், தங்களுக்கு பட்டா வழங்கப்பட்டிருப்பதாக கூறி வேலி அமைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்தரையர் சமுதாய மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொத்தரி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அமைதியாக கலைந்து சென்றனர்.