காரைக்கால் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டும் இதுவரை சம்பளம் உயர்த்தி வழங்கப்படாததை கண்டித்து 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பணிபுரியும் பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் பல கட்ட போராட்டம் நடத்தி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து வவுச்சர் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
ஆனால் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வை அளிக்காததால் வவுச்சர் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதனால் 200க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் இன்று பணிகளை செய்யாமல் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது தங்களுக்கு உயர்த்தி தருவதாக அறிவித்து இருந்த சம்பள உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி பணி புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். இதனால் பொதுப்பணித்துறையின் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.