கன்னியாகுமரி வரதட்சணை கொடுமை புதிய தலைமுறை
தமிழ்நாடு

கன்னியாகுமரி வரதட்சணை கொடுமை: மருமகள் இறந்த நிலையில், கைதுக்கு பயந்து மாமியார் விபரீத முயற்சி!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

PT WEB

செய்தியாளர்: நௌஃபல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை செய்ததாக மருமகள் தற்கொலை செய்து நேற்று முன்தினம் இறந்துள்ளார். தற்கொலைக்கு முன்னர் அவர் தனது தாய்க்கு அனுப்பிய உருக்கமான ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைது நடவடிக்கைக்கு பயந்து மாமியார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை அருகிலிருந்தோர் மீட்டுள்ளனர்.

சுருதி மற்றும் செண்பகவள்ளி

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் கொட்டாரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், கோவை மாவட்டம் பாபு (கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த மின்வாரிய மேற்பார்வையாளர்) என்பவரின் மகள் சுருதி (வயது 24) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி இவருக்கும் இருவீட்டு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது மணமகன் வீட்டாரின் நிர்ப்பந்தத்தின்பேரில் பெண் வீட்டார், 45 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரொக்க பணம், ஏராளமான வெள்ளி பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்து உள்ளனர்.

இந்நிலையில் திருமணத்துக்குப் பின் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கணவர் கார்த்திக் உடன் சுருதி வாழ்ந்து வந்த வீட்டில், அவர்களுடன் மாமியார் செண்பகவள்ளியும் வசித்து வந்தார். இதில் 3 மாதங்கள் கடந்ததும் மாமியார் தரப்பில் சுருதிக்கு வரதட்சனை கொடுமை மற்றும் சித்திரவதை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுருதி

இந்நிலையில் திருமணமாகி ஆறு மாதமே ஆகியுள்ள நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சுருதி தற்கொலை செய்து இறந்தார். இறக்கும் முன் தன் தாய்க்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் தன் தற்கொலைக்கு காரணம், தன் மாமியார் என்றவகையில் பேசி அனுப்பியுள்ளார். இதை கேட்ட அவரது தாய், தந்தை மகளை காண புறப்பட்டுள்ளனர்.

ஆனால் சில நிமிடங்களில் அவர் இறந்துவிடவே, அவரது பெற்றோருக்கு அத்தகவல் கார்த்திக் குடும்பத்தினர் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுருதியின் பெற்றோர், கோவையிலிருந்து குமரி மாவட்டம் சென்றனர். அங்கு, “எங்கள் மகளை வரதட்சனை கொடுமையால் மாமியார் குடும்பத்தினர் சித்திரவதை செய்து கொன்று விட்டனர். இது தற்கொலை இல்லை கொலை” என பெற்றோர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து தற்போது ஆர்.டி.ஓ., விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தற்கொலை செய்வதற்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் தனது தாய்க்கு சுருதி அனுப்பிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் “என் கணவரின் அம்மா என்னை மிகவும் கொடுமைபடுத்துகிறார். நான் அவரோடு சேர்ந்து அமர்ந்தல்கூட திட்டுகிறார். அவருடன் சேர்ந்து இருக்க விடாமல் திட்டி கொண்டே இருப்பதோடு, அவரது அருகில் இருந்தாலும், உணவு அருந்தினாலும் அது பிடிக்காமல் கொடுமைப்படுத்தி வருகிறார். எச்சில் தட்டில் சாப்பிட சொல்கிறார்.

தற்கொலை தீர்வல்ல

என்னால் அவர் தற்கொலை செய்வதாக கூறி மிரட்டுகிறார். வீட்டை விட்டு வெளியேறி அனைவரையும் பயமுறுத்த பார்க்கிறார். நான் எனது கணவருடன் வாழக்கூடாது என்று கூறி என்னை வீட்டை விட்டு வெளியே போக வற்புறுத்துகிறார். என்னால் வாழாவெட்டியாக இனி அம்மா வீட்டில் இருக்க முடியாது. எனது இறப்பிற்கு பின்பு எனது உடலுக்கு ‘கணவர் வீட்டு கலாசாரத்தின்படி’ எனக்கூறப்படும் எந்த சடங்கிற்கும் இடம்கொடுக்க கூடாது. இவர்கள் கலாசாரம் எனக்கு தேவையில்லை” என உருக்கமாக கூறியுள்ளார். இத்துடன், தன் நகை எங்கு உள்ளது என்ற விவரத்தையும் தனது சகோதரியை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவும் பெற்றோரிடம் கூறியுள்ளார் ஸ்ருதி. அந்த ஆடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு பயந்து மாமியார் செண்பகவள்ளி விஷம் குடித்து நேற்று தற்கொலை முயற்சி செய்துள்ளார். இருப்பினும் அவர் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர்மீதும் இதில் சம்பந்தப்பட்ட பிறர் மீதும் வரதட்சணை கொடுமை நடவடிக்கை பாயும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்கொலை எண்ணம் வந்தால், அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.