தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்த்த குமரி மாவட்ட மக்கள்..!

புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்த்த குமரி மாவட்ட மக்கள்..!

Rasus

உலகமே புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், குமரி மாவட்டத்தின் கடற்கரையோர கிராமங்கள் சோகத்தால் நிறைந்துள்ளன. ஒகி புயலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, புத்தாண்டு கொண்டாட்டங்களை மீனவ மக்கள் தவிர்த்தனர்.

உலகமே உற்சாகத்தில் திளைத்திருந்த புத்தாண்டு இரவில் கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள் மட்டும் சோகத்தில் மூழ்கியிருநத்னர். காரணம் சமீபத்தில் உண்டான ஒகி புயல் தந்து சென்ற பாதிப்புகள்தான். குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் இரயமன்துறை வரை உள்ள மீனவ கிராம மக்கள், ஒகி புயலில் உயிர் நீத்தவர்களுக்காக புத்தாண்டு நாளில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நவம்பர் மாதம் இறுதியில் குமரியைத் தாக்கி ஒகி புயலில் சிக்கிய 189 பேர், இதுவரை கரை திரும்பவில்லை. இதனால், கொண்டாட்டங்களைத் தவிர்த்த மீனவ மக்கள், உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கரை திரும்பாத மீனவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றே சில குடும்பத்தினர் இரங்கல் கூட்டம் நடத்திய நிலையில், எஞ்சிய மீனவர்கள் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையில், அவர்கள் விரைவில் கரைதிரும்ப வேண்டும் என உறவினர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனிடையே காணாமல்போன மீனவர்களை உயிரிழந்தவர்களாக கருதி, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மீனவ அமைப்பினர் கோரிக்கை வைக்கின்றனர்.