மனித சங்கிலி போராட்டம் pt desk
தமிழ்நாடு

குமரி | அணு கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – மனித சங்கிலி போராட்டத்தில் மீனவ கிராம மக்கள்!

குமரி மாவட்டத்தில் IREL மணல் ஆலைக்கு அணு கனிம சுரங்க அமைக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடற்கரை கிராமங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

PT WEB

செய்தியாளர்: மனு

கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட நீரோடி முதல் இனையம் வரையிலான கடற்கரை கிராமங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள மற்ற கிராமங்களில் மணவாளக்குறிச்சி IREL மணல் ஆலைக்கு தேவையான அணு கனிம மணல் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து IREL ஆலைக்கு இங்கு அணு கனிம சுரங்கம் அமைக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன.

மனித சங்கிலி போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீரோடி முதல் இனையம் வரையிலான கடற்கரை கிராமங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடற்கரை கிராமங்கள் மற்றும் இந்த கிராமங்களை ஒட்டி இருக்கும் மற்றும் கிராமங்கள் என 250 கிராமங்களில் இன்று காலை 9 மணியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அணு கனிம சுரங்க எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மணவாளக்குறிச்சி IREL மணல் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.