தமிழ்நாடு

தப்பிச்சென்ற உடும்பு வேட்டையன் : மாறுவேடத்தில் சென்று பிடித்த வனத்துறை..!

தப்பிச்சென்ற உடும்பு வேட்டையன் : மாறுவேடத்தில் சென்று பிடித்த வனத்துறை..!

webteam

கன்னியாகுமரியில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த உடும்பு வேட்டையனை வனத்துறையினர் மாறுவேடத்தில் சென்று சுற்றிவளைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட தெற்கு மலைப்பகுதியில் சிலர் உடும்பை வேட்டையாடி சமைத்து உண்பதாக கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி வனத்துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் தெற்கு மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சிலர் உடும்பினை, பிடித்து சமைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்த வனத்துறையினர் தெற்கு கருங்குளத்தினை சேர்ந்த கண்ணன், சுபாஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரை பிடித்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கணேஷ் குமார் (23) என்ற இளைஞர் தப்பி சென்று தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் அவர் வள்ளியூர் அருகேயுள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாகவும், அந்த உறவினரின் புகைப்படமும், முகவரியும் வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் வனச்சரகர் திலிபன் தலைமையிலான வனகாப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழு, விவசாயிகள் போன்று மாறுவேடம் அணிந்து கணேஷ் பதுங்கியிருந்த வாழை தோட்டத்தில் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கணேஷ் அங்கு பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். வந்தவர்கள் வனத்துறையினர் என தெரிந்ததும் கணேஷ்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது.. ஆனால் வனத்துறையினர் சுற்றி வளைத்து அவரை கைது செய்து, நாகர்கோவில் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.