தமிழ்நாடு

கன்னியாகுமரி: குடும்ப பிரச்னையால் முன்னாள் ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி: குடும்ப பிரச்னையால் முன்னாள் ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

கன்னியாகுமரியில் முன்னாள் ராணுவ வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சொல்லோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர் தனது குடும்பத்துடன் சுசீந்திரம் தேரூர் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்துள்ளார். குடிப்பழக்கம் உடைய இவர் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு செல்ல தயாரான இவர், வீட்டில் உள்ள தனி அறைக்குச் சென்று கதவை மூடியுள்ளார். இதைத் தொடர்ந்து திடீரென துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அவரது மனைவி குமாரி சாந்தி கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது ஜெயபிரகாஷ் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுடப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த சுசீந்திரம் போலீசார், உடலை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் பயன்படுத்தி வந்த லைசென்ஸ் உள்ள இரட்டை குழல் துப்பாக்கியால் அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.