கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதி பச்சை நிறமாக மாறிய நிலையில் மீன் குஞ்சுகள் முதல் பெரிய மீன்கள் வரை செத்து மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல் மணவாளக்குறிச்சி வரையிலான அரபிக்கடல் பகுதிகள் நேற்று முன்தினம் முதல் திடீரென கரும்பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இதனால் கடல் அலையால் ஏற்படும் நுரையும் வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில், இன்றும் குளச்சல் முதல் மணவாளக்குறிச்சி கோடிமுனை உள்ளிட்ட கடல் பகுதிகள் பச்சை நிறத்திலேயே காட்சியளிக்கிறது. இதையடுத்து கடல் பகுதிகளில் மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கிறது.
இதைத் தொடர்ந்து மீன் குஞ்சுகளும் செத்து கரை ஒதுங்கும் நிலையில், மீன் வளம் கடுமையாக பாதிப்படையும் என மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மீன்கள் செத்து கரை ஒதுங்குவதற்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? இல்லை கடலில் கப்பல் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் ரசாயண ஆலை கழிவுகள் காரணமா? என மீன்வளத்துறை மற்றும் மத்திய கடல் ஆராட்சி நிறுவனமும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.