கதறும் கடலோர மக்கள் pt desk
தமிழ்நாடு

”அணு கனிம மணல் சுரங்கம் வேண்டாம்” - எதிர்க்கும் கன்னியாகுமரி மாவட்ட கடலோர மக்கள் - காரணம் என்ன?

அணு கனிம மணல் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட கிராம மக்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரோடி முதல் இனையம் வரையிலான கடற்கரை கிராமங்களில் அரிய வகை கனிம மணல் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் கனிம மணல் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கியது. தாது மணல் எடுக்கும் பணியை இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடட் எனும் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு வருமாறு கிராம மக்களுக்கு அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

Protest

பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தின் போது தான், இப்படி ஒரு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள தகவல் கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதன்பின்னர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட பல்வேறு கிராம மக்கள் முதற்கட்டமாக அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர். தாது மணல் திட்டத்தால் தங்கள் பகுதி பல்வேறு பாதிப்புக்கு ஆளாகும் என்பது அவர்களது அச்சம்.

தாது மணல் ஆலைக்கு எதிராக ஒவ்வொரு கிராமங்களில் தனித் தனியாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இப்போது அவர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். அணு கனிம மணல் சுரங்க திட்டத்திற்கு எதிராக இரண்டாவது கட்ட போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

தூத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, இரவி புத்தன் துறை, சின்னத்துறை, தூத்தூர், பூந்துறை, இரையுமன்துறை ஆகிய எட்டு கடற்கரை கிராம மக்கள் இணைந்து விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர்.

Protest

தாது மணல் சுரங்கத் திட்டத்தை செயல்படுத்தப்போகும் ஐ ஆர் இ எல் நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. மத்திய-மாநில அரசுகளும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பம் விடுக்கவில்லை என்பதும் கடலோர கிராம மக்களின் குற்றச்சாட்டு. இதனால் போராட்டம் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.