தமிழ்நாடு

நண்பர்களுடன் கடலுக்கு குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் சடலமாக திரும்பிய சோகம்!

நண்பர்களுடன் கடலுக்கு குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் சடலமாக திரும்பிய சோகம்!

ச. முத்துகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கடற்கரையில் நேற்று நண்பர்களோடு கடலில் குளிக்க சென்று, அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவரது சடலம் 12 மணி நேரத்திற்கு பின் கரை ஒதுங்கியது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான திவின். இவர் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடி பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று தேர்வு முடிந்த நிலையில் திருவனந்தபுரம் அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில் அருகிலுள்ள சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வந்துள்ளார் திவின். இதையடுத்து கோவளம் கடற்கரையில் 3 நண்பர்களோடு கடலில் திவின் குளித்துள்ளார். இதில் திடீரென கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட திவின் மாயமானார்.

இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசாரும் அப்பகுதி மீனவர்களும் திவினை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 12 மணி நேரத்திற்கு பின் திவினின் இறந்த உடல் கோவளம் கடற்கரையோரம் கரை ஒதுங்கியது.

திவினின் உடலை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உடற்கூறு ஆய்விற்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு முடிந்து வீடு திரும்ப இருந்த கல்லூரி மாணவன் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.