தமிழ்நாடு

“கந்துவட்டி கொடுமை: என் மகளை கடத்திவிடுவதாக மிரட்டுகிறார்கள்” - பெண் புகார்

“கந்துவட்டி கொடுமை: என் மகளை கடத்திவிடுவதாக மிரட்டுகிறார்கள்” - பெண் புகார்

kaleelrahman

கந்துவட்டி கொடுமையால் பணத்தை கட்டவில்லை என்றால் பெண் பிள்ளையை கடத்தி விடுவேன் என மிரட்டல் விடுப்பதாக பெண் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ராஜவீதி தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர், அதே பகுதியில் சிற்பம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தனது தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2019ம் ஆண்டு திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த பார்கவி என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், பத்மாவதி சரியாக வட்டி கொடுத்து வருவதை பார்த்த பார்கவி 2 பைசா வட்டியை 6 பைசாவாக கொடுக்க வற்புறுத்தியுள்ளார். வேறு வழியல்லமால் பத்மாவதியும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் தொழில் முடக்கம் ஏற்பட பத்மாவதி வட்டிகொடுக்க முடியமால் பரிதவிக்க, பார்கவி தன்னிடம் சீட்டு கட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார். சீட்டில் விழும் முழு தொகை மூலம் தனது வட்டியை அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பத்மாவதி சீட்டு கட்ட தொடங்கி அதில் வரும் தொகையை வாங்கி வட்டி கொடுக்க தொடங்கியுள்ளார். பின்னர் நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகையில் பணத்தை பத்மாவதியிடம் வாங்க தொடங்கினர் பார்கவி. இப்படியாக 6 லட்ச ரூபாய்க்கு 14 லட்சம் ரூபாய் வரை வட்டி மட்டும் கட்டியுள்ளார் இந்நிலையில், வாங்கிய பணத்தை முழுவதுமாக கட்ட வலியுறுத்தி தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார் மேலும் பணம் தரவில்லை என்றால் தனது 11 வயது மகளை; கடத்திச் சென்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார் என காவல் துறையிடம் பத்மாவதி புகார் அளித்துள்ளார்

இதுகுறித்து காஞ்சிபுரம் கோட்ட ஆட்சியர் ராஜலட்சுமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். புகார் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய வருமானத்தைக் கொண்டு வாழ வேண்டும். வருமானத்திற்கு மேல் கடன் வாங்கி கஷ்டத்தில் சிக்கி தவிக்கக் கூடாது. கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது புகார் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை நிச்சயம் வழங்கப்படும் என்றார்.