தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சாலை கடந்த 2 வருடங்களாக குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் கிடப்பதை சுட்டிக்காட்டி 6 வயது சிறுவன் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்து வரும் மனோ தங்கராஜ் வீடு கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் உள்ளது. இவரது வீட்டிற்கு அருகில் உள்ள மூசாரி-பாலூர் இணைப்புச்சாலை பகுதி கடந்த இரண்டு வருடங்களாக போக்குவரத்துக்கு ஏற்றவாறு இல்லாமல் குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து விபத்துகளில் சிக்குவதும், அவசர கால ஊர்திகள் செல்ல முடியாத அவல நிலையும் இருந்து வருகிறது.
இருந்தும் இந்த சாலையை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், அந்த சாலை வழியாக தனது குடும்பத்தினருடன் வந்த 6 வயது சிறுவன் ஒருவன், காரில் இருந்தபடி சாலையின் அவலத்தை வீடியோ எடுத்து, அமைச்சரின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சாலை தரமற்று கிடப்பதை சுட்டிக்காட்டி எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதுகுறித்து வீடியோவில் பேசியுள்ள சிறுவன், சாலை மிகவும் கரடுமுரடாக இருப்பதாகவும், 2 வருடங்களாக இப்படி இருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.