தமிழ்நாடு

விழுப்புரம் சம்பவத்தால் மனிதநேயம் செத்துவிட்டது: கனிமொழி கோபம்

விழுப்புரம் சம்பவத்தால் மனிதநேயம் செத்துவிட்டது: கனிமொழி கோபம்

webteam

விழுப்புரம் சம்பவத்தால் மனிதநேயம் செத்துவிட்டதோ என திமுக எம்பி கனிமொழி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த, ஆராயி மற்றும் அவரது மகள் தனம் ஆகியோர் சில தினங்களுக்கு முன் தங்கள் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதில் 14 வயது சிறுமி தனம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது. அத்துடன் ஆராயினுடைய 8 வயது மகனும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். நிலத் தகராறு காரணமாக, மாற்று சாதியினரால் இந்த இறக்கமற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கனிமொழி, “விழுப்புரம் மாவட்டத்தில் 14 வயதுச் சிறுமி ஈவு இரக்கம் இல்லாமல் சிதைக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரன் சிறுவன் என்றும் பாராமல் அடித்துக் கொல்லப்பட்டுள்ளான். தாயாரும், அந்தச் சிறுமியும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.  இந்நிகழ்வு தமிழகத்தில் மனிதம் செத்துவிட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் போலீசார் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.