தேர்தல் பரப்புரையில் கனிமொழி ட்விட்டர் | @KanimozhiDMK
தமிழ்நாடு

“பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது” - கனிமொழி

“முதல்வர் ஸ்டாலின் சொன்னதைப் போல் இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது” என்று கனிமொழி பேசியுள்ளார்.

webteam

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி சின்னமனூரில் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

தேனியில் தேர்தல் பரப்புரையில் கனிமொழி

அப்போது பேசிய அவர், “தேனி மக்களவைத் தொகுதியில் நமது வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிகிறார். அவர் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டிதான் வாக்கு சேகரிக்கிறார். அந்த ஜெயலலிதாவே, ‘பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததுதான் நான் வாழ்க்கையில் செய்த முதல் தவறு. இனி எக்காலத்திலும் கூட்டணி சேர மாட்டேன்’ என்றார். மேலும் தேர்தலில் ‘இந்த லேடியா அந்த மோடியா?’ எனக் கேட்டார். அப்படியானவரின் படத்தை போட்டு, பாஜவுடன் கூட்டணி வைத்து ஏன் மக்களிடம் ஏமாற்றி வாக்கு கேட்கிறார்கள் இவர்கள்!

டிடிவி தினகரன் ஆர்.கே நகரில் எப்படி வெற்றி பெற்றார் என்பது தேனியில் எல்லோருக்கும் தெரியும். அதனால் தேர்தல் நேரத்தில் கூட மக்களை ஏமாற்றுபவர்களை நம்பி வாக்களிக்காதீர்கள்.

பாஜக-வினர் எதிர்க்கட்சியினர் மீது வழக்கு போடுவார்கள். ரெய்டு என்ற பெயரில் கொடுமைப்படுத்துவார்கள். ஆனால், டிடிவி தினகரன் மீது 29 கோடிக்கான அமலாக்கத் துறை வழக்கு உள்ளது. அது வட்டியோடு தற்போது 75 கோடியாகி உள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிக்கு பணம் கொடுக்க முயன்றதாக வழக்கு உள்ளது. இதெல்லாம் இல்லாமல் போக வேண்டுமென்றால் பாஜகவுடன் அவர் இணைய வேண்டும். ஏனெனில் பாஜகவில் இணைந்தால் வழக்குகள் காணாமல் போகும்.

முதல்வர் ஸ்டாலின் சொன்னதைப் போல் இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திர போராட்டம். பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டது” என்று பேசினார்.