Kanimozhi MP pt desk
தமிழ்நாடு

“தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிய அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறார் முதல்வர்” - MP கனிமொழி

“தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து ஒன்றிய அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்” என்று கனிமொழி எம்.பி பேசினார்.

webteam

செய்தியாளர்: மணி சங்கர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கருப்பூர், கடலையூர், எட்டயபுரம், கீழஈரால் உள்ளிட்ட பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியானது திமுக-வினரால் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்புரையாற்றினார்.

கனிமொழி

அப்போது அவர் பேசுகையில்...

“தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து ‘தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும். இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி பல்வேறு முதலீடுகளை பெற்று வந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்களுக்காக திட்டங்களை உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறார்.

காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என ஒவ்வொருவருக்கும் எது தேவை என்பதை நாம் சொல்வதற்கு முன்பாகவே உருவாக்கி தந்து கொண்டிருக்கக் கூடிய முதலமைச்சராக உள்ளார். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழகத்திற்கான நிதியை நமக்கு தருவதில்லை. நம்மிடம் வாங்கும் வரிப்பணத்தில் இருந்து நமக்கு நிதி தர வேண்டும். அதையே தருவதில்லை. 100 நாள் வேலை திட்ட ஊதியமும் சரியாக வரவில்லை.

cm stalin, pm modi

தமிழகத்திற்கு ஒன்றிய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க கூடிய முதல்வர் நம்முடைய முதல்வர். தொடர்ந்து மக்கள் அவருக்கு உறுதுணையாக ஆதரவளிக்க வேண்டும்” என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.